Friday, March 19, 2010

வசப்படுமா

உழைக்கும் கரங்கள் உறுதிகொள் நெஞ்சம்
பிழைப்பில் நேர்மை பிறர்நலம் பேணல்
நாடும் மொழியும் நல்லுயிர் கலத்தல்
தேடும் அறிவினில் முடிவிலா நாட்டமே
மனிதப் பிறப்பின் மாண்புறு இலக்கணம்
இனியொரு விதியும் இதன்மேல் இல்லை
குறுக்கு வழியில் கொள்ளை தேடுவோர்
உறுப்பிலாப் பிண்டம் உணர்விலா மரங்கள்
குருதியை உறிஞ்சிக் குடிக்கும் கூட்டம்
தெருவில் கழிவினைத் தின்பதை யொக்கும்
உழைப்பின் மலர்ச்சியே உலகிடைப் புதுமை
நிலைத்த புகழின் ஊற்றும் அதுவே
கனலிடைப் பட்ட இரும்புத் துண்டாய்
புனலிடை ஓடும் காகிதப் படகாய்
வாழ்வதை இன்பமாய் வழக்கமாய்க் கொண்டவர்
தாழ்வுறல் நீதியா தழைக்குமா அறங்கள்
பாடு படுபவன் உயர்ந்திட மகிழ்வோம்
நாடவன் கையில் வசப்பட எழுவோம்
.